Search This Blog

Saturday, August 2, 2014

அன்பின் வகைகள்

அன்பின் மூன்று வகைகள்:
                         அன்பு என்ற பண்பு எல்லோருக்கும் பிடித்த யாவரையும் கவரக்கூடிய ஒன்று ஆகும்! அன்பாக பேசி பழகும் ஒருவருடன் யாருமே வெகு விரைவில் ஐக்கியம் ஆகிவிட முடியும். அன்பு என்ற இந்த வார்த்தைக்கு பாசம், நேசம், காதல், கருணை என்று பல்வேறு பரிணாமங்கள் உள்ளது.

                         அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார். (1யோவா 4:8) என்று அன்பின் அதிமுக்கியத்துவத்தை வேதம் நமக்கு தெளிவாக விளக்கியுள்ள போதிலும், அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். (மத். 24:12)
                என்ற வேத வார்த்தைப்படி இந்நாட்களில் அனேக மனிதர்களிடம் வெகு வேகமாக குறைந்து கொண்டே போகும் அன்பின் வகைகளை அறிய தொடர்ந்து படிக்க வேண்டுகிறேன்
உலகில் காணப்படும் அன்பை பொதுவாக மூன்று வகைகளாக பிரிக்கலாம்.
1. மிருக அன்பு :
                 மிருகம் என்பது பகுத்தறிவு இல்லாத உயிரினமாக இருக்கின்ற போதிலும் அவைகளிடத்திலும் அன்பு உண்டு. அதிலும் சில மிருகங்கள் மனிதனைவிட ஒருபடி அதிகமான அன்பும் நன்றியும் உள்ளதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

என்னதான் மிருகங்களிடம் அன்பு காணப்பட்டாலும் அந்த அன்பு பொதுவாக சுயநலம் சார்ந்த அன்பாகவே இருக்கும். தனக்கும் தன் குட்டிகளுக்கும் போகத்தான் எதுவுமே என்ற நிலையில் வாழும். தன்னை வாழ வைப்பது யார், யாரிடம் தஞ்சமாக உள்ளோம், தனக்கு உணவு கொடுப்பது யார் என்ற எந்த ஒரு உணர்வும் இல்லாமல் அது சுகமாய் தங்கி இருக்கும் இடத்தில் அந்நியர் யாரும் வந்துவிட்டால் உடனே ஒரு சத்தமிட்டு தன் எதிர்ப்பை வெளிப்படுத்துவதொடு கடும் கோபத்துடன் எதிராளி மீது மோதும் தன்மையுடையது
                         இது போன்ற அன்பு இன்று அனேக மக்களிடமும் காணப்படுவதுதான் மிகவும் வேதனையான விஷயம். தலைவிரித்தாடும் சுயநலம், எல்லாவற்றிலுமே ஏதாவது ஆதாயத்தை எதிர்பார்த்து செய்யும் நிலைமை, யார் நஷ்டம் அடைகிறார், அதனால் என்ன பாதிப்பு என்றெல்லாம் கொஞ்சமும் யோசனை செய்யாமல் தானும் தன் குடும்பமும் நன்றாக இருந்தால் போதும் யார் எப்படி போனால் நமக்கென்ன என்ற நோக்கோடு இன்று மனித கூட்டம் செயல்படுகிறது.
                         உயிர்காக்கும் மருந்திலிருந்து உணவு பொருள்கள் வரை எல்லாவற்றிலும் கலப்படம், தெரு பொறுக்கும் கார்பரேசன் துடப்பத்தில் இருத்து மனிதனின் கிட்னி வரை எங்கும் திருட்டு. இவை எல்லாம் மிருக அன்பை விட கேவலமான அன்பு மனிதனிடம் புகுந்து விட்டதால் வந்த அலங்கோலங்கள். .
2. மனித அன்பு:-
                மனித அன்பு என்பது மாறும் அன்பாகும். இன்று "நீ இல்லாமல் வாழவே முடியாது" என்று சொல்லும் அதே வாய் நாளை "நீ இருந்தால் என்னால் வாழவே முடியாது" என்று மாறி பேசும். இன்று "உன்னை போல் நல்லவன் இல்லை" என்று சொல்லும் வாய் நாளை "உன்னை போல ஒரு கெட்டவனை நான் பார்த்ததே இல்லை" என்று சொல்லும் மனித அன்பு நம்பகத்தன்மை அற்றது ஆகும்
மேலும் இந்த அன்பு பச்சோந்தி போல அவ்வப்பொழுது நிறம் மாறும் தன்மை கொண்டது. ஏழை, பணக்காரன், பெண், ஆண், தொழிலாளி, முதலாளி, என்பதின் அடிப்படையிலும் வயது மட்டும் இருக்கும் சூழ்நிலை பதவிக்கு தகுந்தார்போலவும் நிறம் மாறும் தன்மையுள்ளது.
                ஞாயிற்று கிழமை இயேசு எருசலேம் உள்ளே நுழையும் போது அவருக்கு மிக பெரிய வரவேற்பு கொடுத்து "உன்னதத்தில் இருந்து வந்தவருக்கு மகிமை" என்று பாட்டு பாடிய மக்களில் பலர் வியாழக்கிழமைக்குள் "அவரை அகற்றும்" "சிலுவையில் அறையும்" என்று சத்தம்போடும் அளவுக்கு மாறிவிட்டார்கள் என்றால் பாருங்களேன். காரணம் அவர்கள் இயேசுவை புகழ்ந்தால் தனக்கும் அவர்போல் அடி உதை கிடைத்து விடும் என்ற பயம்தான்.
                ஆளை பார்த்தல் ஒரு அன்பு ஆளை பார்க்காவிட்டால் ஒரு அன்பு, தனியாக இருக்கும் போது ஒரு அன்பு கூட்டமாக இருக்கும் போது ஒரு அன்பு, பணம் இருந்தால் ஒருஅன்பு பணம் இல்லாவிட்டால் ஒரு அன்பு அப்பப்பா எத்தனை விதமான மனித அன்புகள்!

                உலக மனிதர்களின் பச்சோந்திதனமான அன்பு எப்பொழுது எப்படி மாறும் என்பதை தனத்தையும் விளக்கி சொல்ல முடியவே முடியாது! . ஆகவேதான் "உங்கள் அன்பு மாயமற்றதாய் இருப்பதாக" என்று பவுலடியார் எச்சரித்துள்ளார்

3. தெய்வீக அன்பு:
                ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. (யோவா 15:!3) என்று ஆண்டவராகிய இயேசு சொன்ன வார்த்தைகளில் வரும் உயர்ந்த அன்பினையே தெய்வீக அன்பு என்றும் நேசம் என்றும் சொல்ல முடியும்.

                தெய்வீக அன்பு என்பது தன்னை பற்றி என்றுமே கவலைப்படாது, பிறர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்க்காக தன்னையே கொடுக்க கூட தயங்காது. ஒருவன் எத்தனை முறை திட்டினாலும், எத்தனை முறை கடன் வங்கி திருப்பிதாராமல் போனாலும், எவ்வளவுதான் துரோகம் செய்திருந்தாலும் அவன் மீதிலும் அன்பு வைக்கும் நிலையான அன்பே தெய்வீக அன்பு.
                இந்த அன்பு மனிதன் எப்படிப்பட்டவன் என்று பார்க்காது, தனக்கு ஏதாவது கைமாறு கிடைக்குமா என்று பார்க்காது, ஏழை பணக்காரன் வித்தியாசம் பார்க்காது, யாரையும் மனம் நோக பேசாது, இருக்கும் சூழ்நிலையை பார்க்காது ஆனால் பிறருக்கு எவ்விதத்திலாவது உதவ வேண்டும் என்று நினைக்கும். இறைவனின் ஆவி நம்முள் உற்றப்பட்டால் ஒழிய இப்படி ஒரு அன்பை நாம் ருசித்து பார்க்க முடியாது. அப்படிப்பட்ட தெய்வீக அன்பை பற்றி அன்பை பற்றி 1கொரிந்தியர் 13ம் அதிகாரம் மிக அருமையாக விளக்குகிறது.
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
                நரகம் என்று ஒரு கொடிய இடம் இருக்கிறது என்பதை நேரடியாக பார்த்த தெய்வீக மனிதர்கள், எப்படியாவது இந்த ஜனங்களை அங்கு போவதிலிருந்து மீட்க வேண்டும் எந்த ஆதங்கத்தில் சொந்த நாட்டை, நல்ல வாழ்க்கையை துறந்து காடு மேடு என்று அலைந்து இயேசுவை அறிவிக்கும் அந்த அன்பை என்னே சொல்வது.
                நல்ல வாழ்க்கையை துறந்து இந்தியாவுக்கு வந்து இந்திய மக்களுக்காக உழைத்து மரித்த "கார்மைக்கேல் அம்மையார்" "மதர் தெரசா", ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததர்க்காக நெருப்பால் கொளுத்தப்பட்ட வில்லியம், மார்டின் லூதர் போன்ற தேவே மனிதர்களிடமே இந்த அன்பை கான முடியும். யாரென்றே தெரியாதவருக்காக கண்ணீர் விட்டு கதறி மன்றாடவும், பிறருக்காக தன்னையே கொடுக்கவும் கூடிய அன்பு கிறிஸ்தவத்திலன்றி வேறு எந்த மதத்திலும் கிடையாது. ஏனென்றால் அன்புக்கு இலக்கணமான ஆண்டவர் இயேசு என்னும் ஜீவனுள்ள உண்மை தேவன் இங்கு தான் இருக்கிறார்!
                கண்ணதாசன் சொன்னதுபோல் "கருணையும் இரக்கமும் பொங்கும் உள்ளம் தான் கடவுள் வாழ்கின்ற இல்லமாகும்" " கருணை மறந்து வாழும் அன்புதான் இந்த உலகத்தை செலுத்தும் சக்தி. பலவிதமான மனித உறவுகளிடமும் நாம் எதிர்பார்ப்பதும், பெற விரும்புவதும் அன்புதான். துன்பமும் பயமும் நிறைந்ததாக நாம் எண்ணுகின்ற வாழ்வில் அன்புதான் ஒரே ஆறுதல். சிலரிடம் பிரச்சனைகளை பகிர்ந்து கொண்டால் மனம் பாதுகாப்பாக உணர்வதற்கு காரணம் இதுதான். அன்பாக இருப்பதிலும் அன்பு செலுத்துவதிலும் ஈடுபாடு காட்டுவதன் மூலம் எப்போதும் சந்தோஷ உணர்வு ஏற்படுகிறது.
அன்பு என்பது என்ன ?
                பல அர்த்தங்கள் பொதிந்த வார்த்தை இது. இதுதான் அன்பு என அவ்வளவு எளிதில் வரையறுத்துச் சொல்ல முடியாது. மேலும், எந்த அளவிற்கு ‘அன்பு‘ ஆழமான வார்த்தையோ அதே அளவிற்கு மலினப்படுத்தப்பட்டும் உபயோகத்தில் இருக்கிறது.
                அன்பைப் பற்றி பேசாதவர்களே இல்லை. அன்பு, காதல், பாசம் என்று பல்வேறு பெயர்களில் நாம் அழைத்தாலும் எல்லாமே அன்பு என்பதைத்தான் மையப்படுத்துகிறது.
சரி, அன்பு என்பது ஒரு கருத்தா ? அல்லது தத்துவம் என்று சொல்லலாமா ?
நான் சந்தோஷத்தை விரும்புகிறேன்.கடவுள் அன்பாக இருக்கிறார்.நான் உன்னை காதலிக்கிறேன்.என்னுடைய தாயை நேசிக்கிறேன்.இவையெல்லாம் என்ன...?
அன்பை வெளிப்படுத்துகிற பல்வேறு வார்த்தைகள். அன்புதான் இவ்வார்த்தைகளின் மையம். அன்பு எங்கே கிடைக்கும்... எங்கு வாங்கலாம்... அன்பை செலுத்த முடியுமா...?
                அன்பைப் பற்றிய கேள்விகள் நிறையவே உண்டு. அன்பு என்ற உணர்வு உள்மனதிலிருந்து எழ வேண்டியது. சந்தோஷத்தை விரும்புவதும், கடவுள் அன்பாக இருப்பதும், காதலிப்பதும், தாயை நேசிப்பதும் உணர்வுபூர்வமாக செயல்படுத்தப்பட வேண்டும். கடவுள் அன்பாக இருக்கிறார் என்பதற்கு என்ன அர்த்தம்? கடவுள் எந்த துன்பத்தையுமே நமக்கு தரமாட்டார். நாம் மட்டும்தான் கடவுளின் அன்பிற்கு பாத்திரமானவர் என்றில்லை.
                கடவுள் நம் மீது அன்பாக இருக்கிறார் என்று நாம் நம்புவதன் மூலம் எல்லா செயல்களிலும் பய உணர்வு நீங்கி செயல்பட உத்வேகம் பிறக்கிறது. ‘உயிர்களிடத்தில் அன்பு செய்‘ என்று சொல்லியிருக்கிறார்கள். கடவுளிடம் மட்டும்தான் என்றில்லை. எல்லோரும் நம் மீது அன்பாக இருக்கிறார்கள் என்ற நல்ல மனநிலையைக் கொண்டால் வாழ்க்கை இனிதாக அமையும்.
நான் கடவுள் மீது அன்பாக (பக்தியாக) இருக்கிறேன் என்று சிலர் கூறுவார்கள். இதைவிட போலியான விஷயம் வேறு என்ன இருக்க முடியும் ?
                எப்போது நாம் கடவுளை வழிபடத் தொடங்குகிறோமோ, அதாவது, அன்பு செலுத்தத் தொடங்குகிறோமோ அப்போதே நாம் நம்மையே நாம் வழிபடத் தொடங்கி விட்டோம் என்றுதானே அர்த்தம் ? நம் மீது நாமே அன்பு செலுத்திக் கொள்வதுதான் வழிபாடு. அதற்கு புனையப்பட்ட நம்பிக்கை வேண்டியிருக்கிறது. எனவே, அதை நாம் கடவுளின் மீது செலுத்தும் அன்பு என்று கூற முடியாது. கடவுள் என்பது உணர்வு பூர்வமான ஒரு நம்பிக்கை. எந்த விஷயத்தின் மீதும் கவனத்தைக் குவித்து வழிபடுவதன் மூலம் இது சாத்தியம்தான்.
                தன்னம்பிக்கை என்பதுதான் கடவுள் என்பதை உணர்ந்தவர்களுக்கு இது புரியும். சுவாமி விவேகானந்தர் மிக எளிமையாக இதுபற்றிக் கூறுகிறார் “தன்னம்பிக்கை இல்லாதவன் எவனோ அவனே நாத்திகன்“ என்று. நம்பிக்கைதான் கடவுள் என்பதை உணராதவர்கள் மட்டுமே ‘நான் கடவுள் மீது அன்பாக இருக்கிறேன்‘ என்றெல்லாம் கூறுகின்றனர். நாம் எல்லோருமே தினசரி பிரச்சனைகளிலிருந்து தப்பிப்பதையே வாழ்க்கையாக கொண்டிருக்கிறோம். அதற்கென பல நாம் பல வழிகளையும் கண்டுபிடித்து வைத்திருக்கிறோம். பிரச்சனைகளிலிருந்து தற்காலிகமாக தப்பித்துக் கொள்ள உதவும் உத்திகள்தான் தொலைக்காட்சி, கடவுள் வழிபாடு, திரைப்படம், எழுதுதல் இவையெல்லாம். இரண்டரை மணி நேரம் இருட்டில், யாரோ சிலரின் வாழ்வின் சந்தோஷங்களைப் பார்த்து சந்தோஷப்படவும், சோகங்களில் சோகமாகவும் நம் மனது இயல்பாக பழகிவிடுகிறது. அதேபோல்தான் கோயில்களிலும், “எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார்“ என்று வழிபாட்டின் போது வேண்டிக் கொள்வதன் மூலம் நம்முடைய பிரச்சனை நம்மிடமிருந்து இறக்கி விடுகிறோம்.
                பிரச்சனைகளைப் பேசிப் பகிர்ந்து, பிறரிடம் அன்பாக இருப்பவர்களுக்கு இந்த தப்பித்தல் சாதனங்களின் தேவையிருக்காது. நம் தேவைகளைக் கூறவும் பிரச்சனைகளை பேசவும் கிடைத்த அதிலும் பதில் எதுவும் பேசி விடாத  ஒரே சாதனம் கடவுள் என்பதால்தான் கோயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.
                மனிதனின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வை அளிக்கக்கூடியது அன்பு மட்டும்தான். இதில் என்ன பிரச்சனையென்றால் அன்பாக இருப்பது எப்படி என்பதை நாம் உணராமலிருப்பதுதான். அன்பை நாம் எப்படி உணரப்போகிறோம் ? அன்பாக இருப்பதுதான் அன்பு என்பதை நாம் உணர வேண்டும். பலரிடமும் நாம் அன்பாக இருப்பதாக சொல்கிறோம், பேசுகிறோம். ஆனால் உண்மை என்ன?
                மனம் நிறைந்த அன்பு மட்டுமே பலனைத் தரும். உள்ளன்போடு செய்யும் எந்தச் செயலும் மன மகிழ்வைத் தரும். காலையிலிருந்து மாலை வரை நாம் பல மனிதர்களைச் சந்திக்கிறோம், சிரிக்கிறோம், பேசுகிறோம். இவர்களில் எத்தனை பேரிடம் உண்மையான அன்போடு சிரித்துப் பேசி இருப்போம் ? உதடுகள் சிரிப்பதை விடுங்கள். பொய்யாக சிரித்து போலியாக புகழ வேண்டிய கட்டாயம் பலருக்கும் வாழ்வின் பல நிலைகளிலும் ஏற்பட்டிருக்கலாம். நம்மில் எத்தனை பேர் சந்திக்கின்ற அனைவரிடமும் அன்பாக இருந்திருப்போம்.
                அன்பு பற்றி புத்தர் ஒரு கதை சொல்லியிருக்கிறார். வயல் வரப்பு வழியாக ஒருவன் நடநது கொண்டிருக்கும்போது புலியைப் பார்த்து விட்டான். அவன் ஓட புலி துரத்தியது. சிறிய குன்றின் உச்சிக்கு வந்து விளிம்பில் இருந்த காட்டு மரத்தின் வேர்களைப் பிடித்துக் கொண்டு தொங்கினான். புலி அவனை முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. நடுங்கிக் கொண்டே கீழே பார்த்தான். இன்னொரு புலி பார்த்துக் கொண்டிருந்தது. மரத்தின் வேர்களில் அவன் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. இரண்டு எலிகள் வேர்களைக் கடிக்க ஆரம்பித்தன. அவனுக்கு கைக்கெட்டும் தூரத்தில் காட்டுச் செடியின் பழம் இருந்தது. ஒரு கையால் வேரைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் பழத்தைப் பறித்து தின்றான். அப்போது அவன் மனதில் “பழம் எவ்வளவு சுவையாக இருக்கிறது“ என்று தோன்றியது. இக்கதையில் வருகிற ‘கனியைச் சுவைக்கும் மனிதனின்‘ மனநிலைதான் அன்பின் மூலம் நாம் அடைவது.
 

அன்பு

          அன்னையின் வடிவம் அன்பு
          அறுமுகன் வடிவமும் அன்பு
          ஆனந்த வடிவம் அன்பு
          ஆனைமுக வடிவமும் அன்பு
          இன்னல் களையும் அன்பு
          இயேசுவின் வடிவமும் அன்பு
          ஈகையின் வடிவம் அன்பு
          ஈசனின் வடிவமும் அன்பு
          உயர்ந்தோர் வடிவம் அன்பு
          உலகளந்தவன் வடிவமும் அன்பு
          ஊக்கத்தின் வடிவம் அன்பு
          ஊழ்வினை அறுக்கும் அன்பு
          ஏழ்மையின் வடிவம் அன்பு
          ஏகலைவனின் வடிவமும் அன்பு
          நல் எண்ணத்தின் வடிவம் அன்பு
          நாமகள் வடிவமும் அன்பு
          புத்தரின் வடிவம் அன்பு
          பூலோக காந்தியின் வடிவமும் அன்பு
          சிறுநகை வடிவம் அன்பு
          சிறு மழலையின் வடிவமும் அன்பு
          தென்றலின் வடிவம் அன்பு
          தெரசாவின் வடிவமும் அன்பு
          அமைதியின் வடிவம் அன்பு
          என் அல்லாவின் வடிவமும் அன்பு
          வாழ்வின் வடிவம் அன்பு
          வள்ளலாரின் வடிவமும் அன்பு
          என்னைக் கவர்ந்தவரின் வடிவம் அன்பு
          என் நட்பின் வடிவமும் அன்பு
          என் மழலையின் வடிவம் அன்பு
          என் மயக்கத்தின் வடிவமும் அன்பு
          ஊடலின் வடிவம் அன்பு
          கூடலின் வடிவமும் அன்பு
          கருணையின் வடிவம் அன்பு
          காமராசரின் வடிவமும் அன்பு
          என் எழுத்தின் வடிவம் அன்பு -- இதனை
          ஏற்றுக் கொள்பவரின் மனபலமும் அன்பே……………….!

1 comment:

  1. அன்பைக் குறித்து மிக அருமையாக, தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்..

    நன்றி.

    ReplyDelete

Translate